Tuesday, March 8, 2011

A Walk To Remember (ஆங்கில காதல் கதை)





காதலை விரும்பும் அனைவரும் அவசியம் பார்க்கவேண்டிய படம். முடிவு சோகமானது என்றாலும் அழகான காதலை - ஆடம் சங்கமன் (adam Shankman) படமாகி இருக்கிறார். இந்த படம் 36 நாட்களில் படமாக்கப்பட்டது. கதையின் நாயகி Mandy Moore 10 நாட்கள் மட்டுமே நடித்துள்ளார்.இந்த படம் உங்கள் கண்களில் நீர் வழிய வைத்தாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை.

உயர்நிலைப் பள்ளி ஒன்றில் மாணவர்கள் செய்த விளையாட்டு விபரீதமாகி விட, இதற்கு காரணமான அப்பள்ளியின் பிரபலமான முரட்டு மாணவன் லாண்டன் ரோலின்ஸ் கார்டர் (ஷேன் வெஸ்ட்) மாட்டிக் கொள்கிறான். அவனுக்கு தண்டனையாக, பள்ளி முடிந்ததும் வசதியற்ற குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றும், பள்ளி சார்பாக நடக்கவிருக்கும் இசை நாடகத்தில் நடிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்படுகிறது.  அந்த இசை நாடகத்தில் நடிக்கும் தேவாலய பாதிரியாரின் மகளான ஜேமீ, லாண்டனுக்கு பல ஆண்டுகள் பரிச்சயமானவள். ஆனால் இருவரும் பழகியதோ,பேசிக் கொண்டதோ கிடையாது. இருவரும் சந்தித்துக் கொண்டாலும், வெவ்வேறு சமூக அந்தஸ்தில் இருப்பதால் பழகும் வாய்ப்பே இல்லாமல் போனது. 

இசை நாடகத்தில் நடிப்பது கடினமான காரியம் என்பதால், எப்போதும் அமைதியாக காட்சியளிக்கும் ஜெமீ எலிசபத் சுல்லீவன் (மாண்டி மூர்) உதவியை நாட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறான்.உதவ ஒப்புக்கொள்ளும் ஜேமீ, தன்னைக் காதலிக்கக் கூடாது என்று அவனிடம் உறுதிமொழி கேட்கிறாள். இதைக்கேட்டு சிரிக்கும் லாண்டன், ஜேமீயிடம் எப்போதும் தான் காதல் கொள்ளப்போவதில்லை என்று உறுதியாக நம்புகிறான். அந்த நகரத்தில் பிரபலமாக இருக்கும் நவநாகரீக அழகுப் பெண்களுடன் பழகுவதால், பழைய நாகரிக உடைகளை அணியும் ஜேமீ, தன் காதலியாக முடியாது என்ற எண்ணம் அவன் மனதில் மேலோங்கியிருக்கிறது.

லாண்டனும், ஜேமீயும் பள்ளி முடிந்ததும் அவளது வீட்டில் ஒத்திகை செய்கின்றனர்.அப்போது இருவரும் நட்பை வளர்த்துக் கொள்கின்றனர். ஜேமீக்கு உடலில் ஓவியம் வரைந்து கொள்வது, ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் தோன்றுவது உள்பட பல ஆசைகளைத் தன் வாழ்நாளில் சாத்தியமாக்க வேண்டும் என்ற விருப்பம் இருப்பதை லாண்டன் அறிந்து கொள்கிறான்.

நாடகம் அரங்கேறுகிறது. ஒரு காட்சியில் ஜேமீ தனது அழகாலும், வசீகரக் குரலாலும் தன்னுடன் நடிக்கும் லாண்டன் உள்பட அரங்கத்தின் அனைவரையும் வசீகரிக்கிறாள். அவளது திறமை மற்றும் அழகில் மயங்கும் லாண்டன், நாடகத்தின் இறுதிக் காட்சியில் யாரும் எதிர்பாராத விதமாக அவளை முத்தமிடுகிறான். இப்படி ஒரு காட்சி நாடகத்தின் கதையமைப்பில் இல்லாததால் சலசலப்பு எழுகிறது.




இருவரும் காதல் வசப்படுகிறார்கள் ஒருநாள் மாலைப் பொழுதில், தனக்கு கொடிய புற்றுநோய் இருப்பதாக, லாண்டனிடம் கூறுகிறாள் ஜேமீ. சிகிச்சையை நிறுத்தி விட்டதாகவும் அவனிடம் தெரிவிக்கிறாள். லாண்டன் முதல் முறையாக உடைந்து போகிறான். தன் வாழ்நாளில் எஞ்சியுள்ள நாட்களை எண்ணிக் கொண்டிருப்பதால், இந்த உண்மையைக் கூறாமல் லாண்டனை வெறுத்ததாகவும், ஆனால் இதயத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் காதலில் விழுந்து விட்டதாகவும் அவனிடம் கூறுகிறாள்.


உடனே லாண்டன் இதய நோய் சிகிச்சை நிபுணரான தனது தந்தையிடம் சென்று, ஜேமீக்கு உதவுமாறு வேண்டுகிறான். புற்றுநோய் சிகிச்சையில் அவர் நிபுணர் இல்லை என்பதால் முதலில் தயங்கிய அவர், பிறகு ஜேமீயை பரிசோதித்து விட்டு அவளது மருத்துவ தகவல்களை முழுதாக ஆய்வு செய்த பிறகு தான், நடவடிக்கை எடுக்க முடியும் என்று ஆர்வமில்லாமல் கூறிவிடுகிறார். லாண்டன் கடுப்புடன் அங்கிருந்து வெளியேறுகிறான்.

ஜேமீயை இனி காப்பாற்ற முடியாது என்ன உணர்துகொள்ளும் லாண்டன் அவளது ஆசைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றுகிறான் இருவரும் காதலின் ஆழத்தையும், தூய்மையான அன்பையும் உணர்கின்றனர். ஜேமீயின் மரணத்துடன் படம் நிறைவடைகிறது. ஆனால் நோய்வாய்ப்பட்ட தனது தாயின் வாழ்வு முடிந்த அதே தேவாலயத்தில், லாண்டனைத் திருமணம் செய்து கொண்ட பிறகு தான் ஜேமீ இறக்கிறாள். இந்த நிகழ்வே அவளது ஆசைகளின் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. ஜேமியின் நினைவுகளைச் சுமந்து கொண்டு, அவளின் ஆசைப்படி வாழ்வில் தனது குறிக்கோளை எட்டி நல்ல நிலையை அடைகிறான் லாண்டன்.



நான்கு ஆண்டுகள் கழித்து, ஜேமீயின் தந்தையைச் சந்திக்கிறான் லாண்டன். ஜேமீயின் ஆசைப்படி கல்லூரிப் படிப்பை முடித்து, மருத்துவக் கல்லூரியில் சேர்கிறான். அவளைச் சந்திப்பதற்கு முன், பள்ளிப் படிப்பைத் தாண்டுவோமா என்பதிலேயே உறுதியில்லாமல் சுற்றித் திரிந்த அவன், இப்போதைய நிலையை அடைவதற்கு முழுக் காரணம் ஜேமீ தான் என்பதை நினைவு கூறுகிறான். அவள் தந்தையிடம் பேசும் போது, இறப்பதற்குள் ஏதாவது ஒரு "அதிசயத்தை" நிகழ்த்த வேண்டும் என்ற ஜேமீயின் ஆசைகளுள் ஒன்றை, அவளால் நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை என்று வருந்துகிறான். இதற்கு சன்னமான குரலில் பதிலளிக்கும் ஜேமீயின் தந்தை, "அவள் அதிசயத்தை நிகழ்த்தி விட்டாள். அந்த அதிசயம் நீ தான்." என்கிறார்.
படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்!!!



1 comment:

அஞ்சா சிங்கம் said...

அருமையான காதல் கதை .............. இதயத்தை திருடாதே கதை மாதிரி இருக்கிறது .............

Post a Comment